தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை சிந்தாமணி நகர் கண்ணன் காலனி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் நிரம்பி சாலையில் வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை முனிச்சாலையில் உள்ள கான்பாளையம் 4-வது தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. சாலையில் நடக்க முடியாமல் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
செய்தி எதிரொலி
மதுரை திருப்பரங்குன்றம் ஓம் சக்தி நகர் அருகே உள்ள மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் படர்ந்து மிகவும் ஆபத்தான வகையில் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், மரத்தின் கிளைகளை வெட்டி சரி செய்து கொடுத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
எரியாத தெருவிளக்கு
மதுரை கே.புதூர் ராமலட்சுமி நகர் 12-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாதசாரிகள் அவதி
மதுரை நேதாஜி சாலையோரத்தில் கடந்த சிலநாட்களாக குப்பையானது மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறார்கள். மேலும் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடு
மதுரை மாவட்டம்.வாடிப்பட்டி அருகே சால்வார்பட்டி ஊத்துக்கண்மாய் பகுதியை கருவேல மரங்கள் சூழ்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர்த்தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
குண்டும் குழியுமான சாலை
மதுரை காளவாசல் பைபாஸ் சர்வீஸ் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்திற்கு உதவ வேண்டும்.
திருட்டு அச்சம்
மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு அதிக அளவில் நடைபெறும் வண்ணமாக உள்ளன. எனவே, இதனை தடுக்கும் வகையில் மேலூர் மெயின் ரோடு திருமோகூர் சந்திப்பில் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.