நடவடிக்கை எடுப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் பகுதியில் வீரசோழன் சாலையில் மதுபிரியர்கள் சிலர் மதுபாட்டிலை சாலையில் உடைத்தும், சாலையில் படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவிகள், பெண்கள் சாலையில் பயணிக்க அச்சப் படுகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? செல்வம், கமுதி.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் உப்பு நீராக உள்ளதால் அடிப்படை தேவைகளுக்கு அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், திருப்பாப்பாலைக்குடி.
உடற்பயிற்சி கூடம் வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கொல்லங்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி இளைஞர்களுக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சதிஸ்குமார், கொல்லங்குளம்.
குடிநீர் குழாயில் கசிவு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி மங்களான்குளம் பகுதியில் நிலத்தடியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகம், மங்களான்குளம்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதகுடி ரெயில்வே கேட் பகுதி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், பரமக்குடி.