'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் நிழற்குடை அவசியம்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மின்வாரிய அலுவலகம் அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வெளியூருக்கு படிக்க செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். -பெரியசாமி, எரியோடு.
உருக்குலைந்த சாலை
பழனி அருகே தும்பலப்பட்டியில் இருந்து மரிச்சிலம்பு செல்லும் சாலை சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்து விட்டது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதோடு, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் பெரும் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -அறிவாசான், மானூர்.
புதர் மண்டிய கால்வாய்
கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே சிறுகுளம் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய், செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த கால்வாயை தூர்வாரி கரையை பலப்படுத்தினால் சிறுகுளம் கண்மாய்க்கு தேவையான தண்ணீரை கொண்டு வரலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பவுன்துரை, வருசநாடு.
சேதம் அடைந்த சாலை
கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையை அடுத்த வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால் மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.
-மணிகண்டன், உப்புத்துறை.
இணையதள சேவை பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இணையதள சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இணையதள சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், கோபால்பட்டி.
ஆபத்தான மின்சார கம்பிகள்
நிலக்கோட்டை அருகே மாலையகவுண்டன்பட்டி கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் வழியில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால் மின்சார விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
-சுப்புராம், மாலையகவுண்டன்பட்டி.
சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு
போடி அருகே மேலசொக்கநாதபுரத்தில் சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதனால் சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார முடியாததால், கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-பொதுமக்கள், மேலசொக்கநாதபுரம்.
தெருவில் நடுவே மின்கம்பங்கள்
திண்டுக்கல் நாகல்நகர் மென்டோன்சா காலனியில் தெருவின் நடுவே 4 மின் கம்பங்கள் உள்ளன. இந்த வழியாக ரெயில் பயணிகளை ஏற்றி கொண்டு வரும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்துக்கு செல்கின்றன. தெருவின் நடுவே மின்கம்பங்கள் இருப்பதால் வாகனங்கள் விலகி செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே மின்கம்பங்களை தெருவின் ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவன், திண்டுக்கல்.
தெருவிளக்கு எரியுமா?
பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி பேரூராட்சி கொடைக்கானல் மெயின்ரோட்டில் மஞ்சளாற்று பாலத்தில் இருந்து காட்ரோடு வரை கடந்த பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், ஜி.கல்லுப்பட்டி.
சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?
பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் கழிப்பறை வசதியுடன் கூடிய சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் சூழல் உள்ளது. எனவே ஜெயமங்கலத்தில் சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், ஜெயமங்கலம்.
------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
------