தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-07 15:12 GMT

குண்டும், குழியுமான சாலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளம் பண்ணையூரில் இருந்து அஞ்சுகிராமம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆம்புலன்களில் நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன். சுயம்புலிங்கம், செட்டிகுளம் பண்ணையூர்.

* பேட்டை சன்னதி தெருவில் குடிநீர் குழாய் இணைப்புக்கு தோண்டப்பட்ட பகுதியில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதில் பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில் செல்ல முடியாமலும் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன். சித்ரா, பேட்டை.

கழிவுநீரால் சுகாதாரக்கேடு

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கல்லூர் கிராமம் 2-வது வார்டு கீழத்தெருவில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடை அமைத்து தருமாறு வேண்டுகிறேன். சிவசுப்பிரமணியன், மேலக்கல்லூர்.

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம்-இருக்கன்துறை சாலையில் பேச்சியம்மன் கோவில் தென்புறத்தில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் தொட்டு விடும் நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ெபாதுமக்கள் நலன் கருதி ஆபத்தான நிலையில் தொங்கும் இந்த மின்கம்பிகளை மேலே உயர்த்தி கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். சுப்பையா, சங்கனாபுரம்.

காட்சிப்பொருளான அடிபம்பு

நெல்ைல அருகே மணப்படைவீடு பகுதியில் உள்ள அடிபம்பில் பல மாதங்களாக தண்ணீர் வராமல் இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அடிபம்பும் காட்சிப்பொருளாகவே இருக்கிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த அடிபம்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா? பிரவீன் பெரியசாமி, மனப்படைவீடு.

குடிநீர் தட்டுப்பாடு

தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி கிராமத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, குடிநீர் தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மாடசாமி, புளியங்குடி.

மாற்றுப்பாதை விரிவுபடுத்தப்படுமா?

கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூரில் இருந்து சிவசைலம் செல்லும் நெடுஞ்சாலையில் பங்களா குடியிருப்பு அருகில் கடனா ஆற்றில் வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுகிறது. இதற்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மட்டும் செல்லக்கூடிய அளவில் இந்த மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பஸ்கள் செல்ல முடியவில்லை. இதன்காரணமாக இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் சிறிது தூரம் நடந்து சென்று பஸ்களில் ஏறிச்செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. மேலும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். எனவே, பஸ்கள் ஊருக்குள் வந்து செல்வதற்கு வசதியாக இந்த மாற்றுப்பாதையை விரிவுபடுத்தவும், பாலப்பணியை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

மின்கம்பம் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் வாசலில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள 4 மின்கம்பங்களும் சேதம் அடைந்து உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா? பாலமுருகன், கோவில்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்