இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்-கலெக்டர் சாந்தி வேண்டுகோள்

Update: 2023-01-12 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முறைகேடு

தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சிட்டிசன் லாகினை அரசின் முறையான அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய் துறை சான்றுகள், 6 வகையான முதியோர் உதவித்தொகை போன்ற சான்றுகளை பெற விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றுகளில் எழுத்துப்பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன.

பொது இ-சேவை மையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது. சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.120-ம், இணையவழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உட்பிரிவு இல்லாத மனு ஒன்றுக்கு ரூ.60-ம், உட்பிரிவு உள்ள இனங்களுக்கு ரூ.120-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது.

புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து அருகிலுள்ள தாலுகா அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க இ-சேவை மையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சான்று பெற அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது தொடர்பான புகார்களை edm1dpi.tnega@tn.gov.in, edm2dpi.tnega@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதேபோல் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்