நாமக்கல்லில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி-தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்தது

நாமக்கல்லில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை, பேச்சு போட்டி நடந்தது.

Update: 2022-07-08 17:15 GMT

நாமக்கல்:

கட்டுரை, பேச்சு போட்டி

தமிழ்நாடு நாளையொட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சு போட்டி நடந்தது. போட்டியை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜோதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் ஆகியோர் மேற்பார்வையில் 6 முதுகலை தமிழ் ஆசிரியர்கள் நடுவர்களாக பணியாற்றினர்‌.

இதில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் குறித்த 10 தலைப்புகள் தெரிவிக்கப்பட்டன. அதில் இருந்து ஒரு தலைப்பை குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்து, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்‌.

வெற்றி

கட்டுரை போட்டியில் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவன் சுனில் குமார் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தார். எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி பவித்ரா 2-ம் இடத்தையும், பீச்சம்பாளையம் வி.ஐ.டி. பள்ளி பிளஸ்-2 மாணவி ஜனனி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

பேச்சு போட்டியில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி கோபிகா முதல் இடத்தையும், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மிதுனா ஸ்ரீநிதி 2-ம் இடத்தையும், பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி வித்யாஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

பரிசுத்தொகை

இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகைகளை விரைவில் கலெக்டர் வழங்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்