திறந்து கிடக்கும் கழிவுநீர் வடிகாலால் பயணிகள் அவதி

திறந்து கிடக்கும் கழிவுநீர் வடிகாலால் பயணிகள் அவதி

Update: 2023-06-11 18:45 GMT

முத்துப்பேட்டை பகுதியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் வடிகாலால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே இதனை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி கழிவுநீர் வடிகால்

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, புதுத்தெரு அரசு பள்ளி, போலீஸ் நிலையம் ஆகியவைகளின் எதிரே திறந்தவெளி கழிவுநீர் வடிகால் உள்ளது. இதன் அருகே தான் மன்னார்குடி செல்லும் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். அதேபோல் இதன் அருகே உள்ள அரசு பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் வழியாக தான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர். அதேபோல் போலீஸ் நிலையம், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்கும், இந்த பகுதி கடைத்தெருவிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

வடிகாலை மூட வேண்டும்

இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திறந்தவெளியில் உள்ள கழிவுநீர் வடிகால் அருகே நிற்கும் போது துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் வடிகாலில் விழுந்து காயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கழிவுநீர் வடிகாலை மூட வேண்டும் என்று பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு திறந்தவெளியில் கழிவுநீர் வடிகாலை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்