ரூ.30 லட்சத்தில் சமுதாயக்கூடம்
அரியக்குடி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் சமுதாயக்கூடத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
காரைக்குடி,
அரியக்குடி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் சமுதாயக்கூடத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
திறப்பு விழா
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அரியக்குடி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை யூனியன் சேர்மன் சரண்யா செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா வரவேற்றார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு கிராமப்புற மேம்பாட்டிற்காக அனைத்து திட்டங்களையும் வகுத்து அதனை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. தேர்தல் கால வாக்குறுதிகளை 79 சதவீதம் குறுகிய காலத்திலேயே நிறைவேற்றி விட்டோம். ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி, 5 ஆயிரம் கோடி நகை கடன் தள்ளுபடி, 20 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவி குழுக்களான கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.
கிராமப்புற வளர்ச்சி
கிராமங்களின் தன்னிறைவான வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனாலேயே நகர்ப்புறங்களுக்கு இணையான வசதியினை கிராமப்புறங்களும் பெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப் சின்னத்துரை, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், அரியக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் துரை, ஊராட்சி செயலாளர் சுரேஷ், என்ஜினீயர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி ஜான் கென்னடி, ராஜராஜேஸ்வரி, கோவில் முன்னாள் அறங்காவலர் காரை சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.