சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் அரியலூர் வட்டாரத்தை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் அன்பரசி தலைமை தாங்கினார். அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். முன்னதாக கர்ப்ப காலங்களில் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள், காய்கறிகள், உடற்பயிற்சி மற்றும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சத்யா அறிவுறுத்தினார். இந்த விழாவில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா, தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுசீலா வரவேற்றார்.
இதேபோல், கீழப்பழுவூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சின்னப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வேப்ப மரம், புளிய மரம், பனை மரங்களின் விதைகளை நட்டு வைத்தார். அப்போது கொள்ளிடம் குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.