உளுந்தூர்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உணவு பொருட்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி.க்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டையில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். கடைவீதி பகுதியில் வந்தபோது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீரென சென்னை-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக 40 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.