சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 60 பேர் கைது

சிதம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-12 18:45 GMT

சிதம்பரம், 

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், தண்ணீர் இல்லாமல் அழிந்து விட்ட குறுவை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும், வளையமாதேவி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்க காரணமாக இருந்த என்.எல்.சி. அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம் பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 12-ந்தேதி (அதாவது நேற்று) சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

சாலை மறியல்

இருப்பினும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக நேற்று மேலவீதியில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கஞ்சி தொட்டி வரை ஊர்வலமாக வந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சேகர் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் குளோப், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பாஸ்கர், பன்னீர்செல்வம், குப்புசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 60 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்