இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3-வது நாளாக சாலை மறியல்
மத்திய அரசை கண்டித்து 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 227 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கடந்த 12, 13-ந் தேதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக மறியல் போராட்டம் நடந்த நிலையில் நேற்று 3-வது நாளாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
227 பேர் கைது
விக்கிரவாண்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு மாவட்ட துணை செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 34 பேரையும், திருவெண்ணெய்நல்லூரில் மாவட்டக்குழு உறுப்பினர் நாராயணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 40 பேரையும், கண்டாச்சிபுரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 80 பேரையும், மரக்காணத்தில் வட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 33 பேரையும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் வட்ட செயலாளர் தனுசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 40 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 227 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.