இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பூரில் நடைபெறும் செம்படை பேரணியில் 1,000 பேர் பங்கேற்க முடிவு; ஈரோடு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பூரில் நடைபெறும் செம்படை பேரணியில் 1,000 பேர் பங்கேற்பது என்று ஈரோடு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-02 22:07 GMT

ஈரோடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பூரில் நடைபெறும் செம்படை பேரணியில் 1,000 பேர் பங்கேற்பது என்று ஈரோடு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சி கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. எஸ்.டி.பிரபாகரன் தலைமை தாங்கினார். எம்.குணசேகரன், எம்.ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மகாலிங்கம் கொடி ஏற்றினார்.

மாவட்டக் குழு உறுப்பினர் டி.சோமசுந்தரம் தீர்மானத்தின் படி மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் வி.செல்வராஜன் வரவேற்றார். கட்சியில் 50 ஆண்டுகளாக பணியாற்றிவரும் மூத்த உறுப்பினர்கள் டி.என்.நாச்சிமுத்து, எஸ்.மகாலிங்கம், வி.செல்வராஜன் ஆகியோரை மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி. கவுரவித்தார்.

புதிய நிர்வாகிகள்

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் கட்சியின் மூத்த உறுப்பினர்களை பாராட்டியும், கூட்டத்தை தொடங்கி வைத்தும் பேசினார்.

மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு அறிக்கை படித்தார். வரவு- செலவு அறிக்கையை எஸ்.மகாலிங்கம் வாசித்தார்.

கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.டி.பிரபாகரன், துணைச் செயலாளர்களாக எஸ்.சின்னசாமி, எம்.குணசேகரன், பொருளாளராக என்.ரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

செம்படை பேரணி

சி.எம்.துளசிமணி, எஸ்.பொன்னுசாமி, எஸ்.சின்னசாமி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். இந்த தீர்மானங்கள் வருமாறு:-

* இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு 6 முதல் 9 வரை திருப்பூரில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக ஈரோட்டில் மறைந்த மூத்த தலைவர்கள் கே.எஸ்.நாச்சிமுத்து, எம்.நாகப்பன், எஸ்.பி.வெங்கடாசலம் மற்றும் பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. நல்லப்பன் நினைவு ஜோதிகளை தொடர் ஓட்டமாக எடுத்து செல்வது. ஆகஸ்டு 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளில் "மக்கள் விரோத மோடி அரசே வெளியேறு" என்ற முழக்கத்துடன் திருப்பூரில் நடைபெறும் செம்படை பேரணியில் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் இருந்து 1,000 பேர் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி நிறைவுரையாற்றினார். ஈரோடு வட்டார செயலாளர் ஜி.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்