மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்- முத்தரசன்

மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-11-26 19:42 GMT

மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

போட்டி அரசாங்கம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற்றபோது விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு கொடுத்தது. ஆனால் அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மிக மோசமான ஜனநாயக கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.

இதனை தமிழக கவர்னர் ரவியும் பின்பற்றி வருகிறார். சனாதனத்தை ஆதரித்து பேசுகிறார். சனாதனம் தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியது என்கிற கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் கவர்னர் தமிழகத்தில் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.

மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக கவர்னர் பேசி வருகிறார். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம்(டிசம்பர்) மாதம் 29-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

மின்கட்டணம் செலுத்த ஆதார் எண்

தமிழகத்தில் தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்தாலும், இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அந்த துறையின் அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்கிற அறிவிப்பை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.எனவே இந்த விஷயம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க போதிய கால அவகாசத்தை மின்சார வாரியம் வழங்க வேண்டும்.

குத்தகை தொகை தள்ளுபடி

மயிலாடுதுறை போன்று பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கோவில் நிலங்களுக்கான குத்தகை தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில மாநாடு வருகிற 1-ந் ேததி(வியாழக்கிழமை) முதல் 3-ந் தேதி(சனிக்கிழமை) வரை நெல்லையில் நடைபெற உள்ளது. இதில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதற்கான இயக்கங்கள், போராட்டங்கள் தீவிரமான முறையில் நடத்தப்படும். மாநாட்டையொட்டி 3-ந் தேதி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் பாரதி, முத்து.உத்திராபதி, துணைச் செயலாளர் செந்தில்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்