'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க குழுக்கள் -அமைச்சர் தகவல்

‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-07 23:49 GMT

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை அப்துல் ரசாக் காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தி புனரமைப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் கண்காணிப்பு

2022-ம் ஆண்டிற்கான 'நீட்' தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 1,45,988 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார்கள். இவற்றில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் 17,517 பேர் ஆவார்கள்.

தேசிய தேர்வு முகமையிடம் இருந்து தமிழ்நாட்டில் இருந்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறை இயக்குனரகத்தில் இருந்து 50 மனநல ஆலோசகர்களும், முதல்-அமைச்சரின் 110 உதவி எண்ணில் இருந்து 60 மனநல ஆலோசகர்களும் என மொத்தம் 110 மனநல ஆலோசகர்களைக் கொண்டு 1,45,988 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளில் 564 மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தொடர்ச்சியான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. 98 மாணவர்கள் மாவட்ட மனநல ஆலோசனை குழுவினால் கண்டறியப்பட்டு அவர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

மனநல ஆலோசனை

'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட மனநல ஆலோசகர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும், தங்களின் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து மன அழுத்தத்தில் உள்ள மாணவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட மனநல ஆலோசகர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவ்வாறு தகவல் பெறும் பட்சத்தில் இந்த குழுவானது சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கி தொடர்ந்து கண்காணிப்பார்கள். 'நீட்' தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்து அவர்கள் என்னென்ன வழிகளில் தங்களுடைய மேல்படிப்பை தொடரலாம்? எனவும் ஆலோசனை வழங்குவதற்காக தொழில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ச்சியாக மத்திய அரசிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுகுறித்த முடிவை தற்சமயம் ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகத்தால் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

மத்திய அரசுக்கு கோரிக்கை

மேலும் மத்திய ஆயுஷ் மருத்துவத்துறை மந்திரியை சந்தித்து தமிழகத்தில் 100 ஆயுஷ் மருத்துவ மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கவும், நாமக்கலில் 50 படுக்கை கொண்ட சித்த மருத்துவ மையம் அமைக்கவும், பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில்கள் பெறப்பட்டு உள்ளன. மதுரையில் அமைந்துள்ள ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மழைக்காலங்களில் மழை நீரில் மூழ்கும் அளவில் உள்ளது.

எனவே அந்தக் கல்லூரியை இடமாற்றம் செய்து கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் மத்திய அரசிடம் நிதி ஆதாரங்கள் கோரப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மட்டுமே செவிலியர் பயிற்சி மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. பிற மாவட்டங்களிலும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்