ஆவடியில் போக்குவரத்து போலீசாருக்கு இ-செல்லான் கருவிகள் - கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்
ஆவடியில் போக்குவரத்து போலீசாருக்கு இ-செல்லான் கருவிகளை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி மீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டத்தை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். மேலும் இதற்காக போக்குவரத்து போலீஸ்காரர்களுக்கு 100 இ-செல்லான் கருவிகள், 100 'க்யூ ஆர்' குறியீடு கருவிகள் ஆகியவற்றையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் விஜயகுமார், தலைமையிட துணை கமிஷனர் உமையாள், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த இ-செல்லான் கருவிகள் சென்னை மாநகரில் உள்ளவாறு டெல்லியில் உள்ள என்.ஐ.சி.யால் உருவாக்கப்பட்டு இணைய வழியாக செயல்படக்கூடியது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன் வாகன பதிவுக்கான 'வேகன்' இணையதளத்துடனும் டிரைவர்களின் உண்மை தன்மை உறுதி செய்யப்படும்.
இந்த புதிய உரிமம் மென்பொருள் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மீதும் வழக்குகள் பதியலாம். இந்த மென்பொருள் மூலம் வழக்குகள் பதியப்பட்டு அபராதம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் தகுதி சான்றிதழ், உரிமையாளர் பெயர் மாற்றம் போன்ற எந்த சேவைகளையும் பெற இயலாது. போக்குவரத்து அதிகாரிகள் வழக்குகள் பதியும்போதே விதி மீறலில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யும் வசதியும் கொண்டது. பொதுமக்கள் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகையை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வழியாகவும், போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் உள்ள எந்திரத்தின் மூலமாகவும், பாரத ஸ்டேட் வங்கி இணையதள வங்கி பரிவர்த்தனை வழியாகவும் மற்றும் அஞ்சல் அலுவலகம் வழியாகவும் செலுத்தலாம் என போலீசார் தெரிவித்தனர்.