ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அலுவலர் கைது

மணப்பாறையில் ஜி.எஸ்.டி. சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் சோதனையில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2023-07-05 19:11 GMT

மணப்பாறையில் ஜி.எஸ்.டி. சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் சோதனையில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் சேசு. தங்க நகைகளுக்கு ஹால்மார்க் அவசியம் என்பதால், சேசு தனது பட்டறைக்கு ஜி.எஸ்.டி. சான்றிதழ் பெற வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து அவரின் நகைப்பட்டறையை மணப்பாறை வணிக வரித்துறையினர் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து அவரை வணிகவரித்துறை அலுவலகம் வர சொல்லியதாக கூறப்படுகிறது.

பின்னர் அலுவலகம் சென்ற சேசுவிடம், ஜி.எஸ்.டி.சான்றிதழ் வழங்க வணிகவரித்துறை அலுவலர் கோவிந்தசாமி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

கைது

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சேசு இதுதொடர்பாக நேற்று காலை திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின்பேரில் சேசு ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை வணிகவரித்துறை அலுவலர் கோவிந்தசாமியிடம் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோவிந்தசாமியை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.4 லட்சம் பறிமுதல்

கைது செய்யப்பட்ட கோவிந்தசாமி கடலூர் மாவட்டம் நெய்வேலி சேர்ந்தவர். இவர் லால்குடியில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் கோவிந்தசாமியை விடுதி அறைக்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கிருந்த கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்