'வாட்ஸ்-அப்'பில் அழைக்கிறார்கள்-'ஜி.பே'யில் மொய் எழுதுகிறார்கள்; திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா? பொதுமக்கள் கருத்து
திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;
வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணத் தேதி முடிவானால் போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசு அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுப்பது.
அப்போது பேசாத உறவினர்கூட 'சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமுகமாக உறவுகளைப் புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.
மாறிக்கொண்ட மக்கள்
இவ்வாறு நேரில் பார்த்து அழைப்பிதழை பூ பழத்துடன், வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து உறவினர்களை 'கண்டிப்பா வந்துடுங்க...' என உரிமையுடன் அழைப்பது நமது மரபும் கூட.
ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. மாறி வரும் சூழலுக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் மக்களும் மாறிவிட்டார்கள்.
எந்த ஒரு விழாவாக இருந்தாலும் 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள்.
மாறி வரும் இந்த கலாசாரம் பற்றிய திண்டுக்கல் மாவட்டத்ைத சேர்ந்த பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.
தூரம் சென்ற உறவுமுறைகள்
ராணி (மிட்டாய் கடைக்காரர், வேடசந்தூர்):- செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் பழைய உறவு முறைகள் அனைத்தும் தூரமாக சென்றுவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியால் நூலகம், சினிமா தியேட்டர், டேப் ரெக்கார்டர், தொலைக்காட்சி ஆகியவற்றை மறந்ததை போன்று உறவினரையும் மறக்கும் மனநிலைக்கு மக்கள் சென்றுவிட்டனர். செல்போன் வருவதற்கு முன்பு பெற்றோர், தாத்தா, பாட்டி உள்பட அனைத்து உறவினர்களுடன் அமர்ந்து பேசும் பழக்கம் இருந்தது. தற்போது அருகில் அமர்ந்து இருந்தால் கூட பேசுவது அபூர்வமாகி விட்டது. இதில் உச்சமாக திருமண அழைப்பிதழை கூட நேரில் தருவதற்கு பதிலாக வாட்ஸ்-அப்பில் அனுப்பும் பழக்கத்துக்கு மாறிவிட்டனர். இதனால் உறவினர்களிடையே இருக்கும் அன்பு குறைந்து விடுகிறது. அதுமட்டுமின்றி திருமண வீட்டில் மொய் வாங்கும் இடத்தில் கூட உறவினர்களை பார்க்க முடியவில்லை. ஜி-பே, போன்-பே என்று மொய் வழங்கும் முறைவந்துவிட்டது. இந்த பழக்கத்தை தவிர்த்தால் உறவினர்களிடம் அன்பு அதிகரிக்கும்.
மனம்விட்டு பேச நேரமில்லை?
கோகிலவாணி (ஆசிரியை, பழனி):- தற்போது திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்கள் வணிகமயமாகி வருகிறது. முன்பு திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பது, உறவினர்களை வரவேற்பது, உணவு பரிமாறுவது என அனைத்திலும் உறவினர்கள் இருப்பார்கள். இதனால் திருமணத்துக்கு யாரெல்லாம் வந்தனர்? விருந்து சாப்பிட்டார்களா? என்பது குடும்பத்தினருக்கு தெரியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நேரில் செல்வதை தவிர்த்து வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழ் அனுப்புகின்றனர். திருமண வரவேற்பு, உணவு பரிமாறுதல் என அனைத்தையும் வேலை ஆட்களே செய்கின்றனர். திருமண விழாவில் நிறைவாக உறவினர்களை வழி அனுப்பும் இடம் மொய் எழுதும் இடம் தான். அங்கும் முன்பு உறவினர்கள் அமர்ந்து கொண்டு உறவுமுறையை கூறி அழைப்பார்கள். ஆனால் இன்று கம்ப்யூட்டர் சகிதமாக டிப்-டாப் இளைஞர்கள் அமர்ந்து ஆன்லைனில் மொய் வசூலிக்கின்றனர். உறவினர்களிடம் மனம்விட்டு பேசுவதற்கு கூட நேரமில்லாத காலமாகிவிட்டது. இது மாறினால் தான் உறவுகள் நிலைக்கும்.
தமிழர் மரபு
சரவணன் (என்ஜினீயர், திண்டுக்கல்):- திருமணம், சடங்கு, காதுகுத்து போன்ற விழாக்கள் என்பது உறவினர்கள் சந்தித்து, அன்பை புதுப்பித்து கொள்ளும் விழாக்கள் ஆகும். இதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் உறவுகளிடம் விரிசல் ஏற்பட்டு விடும். வெளிமாநிலங்களில் இருந்தால் கூட தபாலில் அழைப்பிதழை அனுப்பி வைத்து, செல்போனில் பேசிவிட வேண்டும். இதனால் நம்மை தேடும் உறவினரின் வீட்டுக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். வாட்ஸ்-அப்பில் அனுப்பினால் அத்தகைய உணர்வு ஏற்படாது. அதேபோல் வீட்டுக்கு வரும் உறவினர்களை வாசலில் நின்று வரவேற்பு, விருந்து கொடுத்து உபசரிப்பு என அனைத்து இடங்களிலும் குடும்பத்தினர் இருக்க வேண்டும். இதுதவிர மொய் கொடுக்கும் இடத்தில் உறவினரில் யாராவது ஒருவர் அமர்ந்து மொய் பணத்தை கையில் வாங்கி, வெற்றிலை-பழம் மட்டும் வைத்து தாம்பூல பை கொடுத்து வழிஅனுப்ப வேண்டும். இதுவே நமது தமிழரின் மரபு. இதை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
உறவுகளை சேர்க்கும் திருமணம்
குணசேகரன் (ஹார்டுவேர் கடைக்காரர், செந்துறை) :- குடும்பத்துடன் சேராமல் விலகி நிற்கும் பல உறவினர்களை சேர்த்து வைக்கும் விழாவே திருமணம். அதற்காகவே திருமண விழாவில் ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாய முறைகள் இருக்கின்றன. உறவினர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் கடைபிடித்த யுக்தி அதுவாகும். ஆனால் காலப்போக்கில் திருமண விழாக்களை கூட வணிகரீதியாக பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. உறவினர்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழை அனுப்பினால் அன்பு பெருகாது, உறவில் விரிசல் தான் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும். உறவினர்கள் திரும்பி செல்லும்வரை அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் மூலம் உணவு பரிமாறுதல், ஆன்லைனில் மொய் வசூல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்கள் கருத்து என்ன?
திருமண அழைப்பிதழ் மட்டுமின்றி, நிச்சயதார்த்தம், காதணி விழா, புதுமனைப் புகுவிழா; மஞ்சள் நீராட்டு, குழந்தைகள் பெயர் சூட்டுவிழா, அலுவலக திறப்பு விழா, பழைய நண்பர்கள் ஒன்றுகூடும் விழா என்பன உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மொத்தத்தில், சமூக வலைதளங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் போக்கை கைவிட வேண்டும் என்றும், அது கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுத்து விடும் என்றும் மக்கள் கருதுகின்றனர். இளைய தலைமுறையினர் இதனை பின்பற்றலாமே.