ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?; வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-14 16:38 GMT

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி.

வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரி மட்டும் இல்லை என்றால், அரசுகள் செயல்படமுடியாது. வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அரசுகள் மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்துகின்றன. வரிகளை பொறுத்தமட்டிலும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்ற 2 பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. மறைமுக வரியாகும். ஜி.எஸ்.டி. வரி முறையை உலகிலேயே முதலாவதாக 1954-ம் ஆண்டு பிரான்சு நாடு அறிமுகப்படுத்தியது.

தற்போது அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியான்மர் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. மத்திய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, பொழுதுப்போக்கு வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்பட வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக ஜி.எஸ்.டி. இருக்கிறது.

ஒரே வரி விகிதம்

நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே மாநிலத்துக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் அதாவது மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. அதன் வருவாயை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஐ.ஜி.எஸ்.டி.) மத்திய அரசினால் விதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 நிலைகளில்(சிலாப்ஸ்) வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரி விதிப்பு முறை என்பது, சேவை துறைகளுக்கு கட்டுமான உருவாக்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருப்பதால், ஜி.எஸ்.டி.யில் ஒரே நிலையில் அதாவது விலக்கு எதுவும் இல்லாமல் ஒரே விகிதத்தில்(ஒரே சிலாப்) வரி விதிப்பினை கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.

சாத்தியமா?

ஜி.எஸ்.டி. என்பது 'ஒரே நாடு ஒரே வரி' என்ற அடிப்படையில் உருவானது. நாடு முழுவதும் ஒரே சீராக வரி விதிக்கப்படும் அதில், வரி விகிதங்களில் சில பிரிவுகள் இருக்கின்றன. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரின் கருத்து ஏற்கப்பட்டால், 'ஒரே நாடு ஒரே வரி' என்ற நிலையில் இருந்து 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே வரி விகிதம்' என்ற நிலைக்கு ஜி.எஸ்.டி. மாறிவிடும். 'ஒரே ஜி.எஸ்.டி., ஒரே வரி' என்ற முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறிய கருத்து வருமாறு:-

பெரும் சிக்கல்

அருண் (கல்லூரி பொருளாதாரத்துறை பேராசிரியர், திண்டுக்கல்):- ஜி.எஸ்.டி. வரியை ஒரே அளவில் மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம் 28 சதவீதம் என்பது அதிகபட்ச வரியாக இருக்கிறது. இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. மக்களின் வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஆனால் வரி விதிப்பால் ஏழைகளுக்கு பொருளாதார ரீதியாக சுமை அதிகமாகிறது. இதனால் ஏழைகள் பொருளாதாரத்தில் வளர முடியாமல் உள்ளனர். எனவே ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களின் மீதான வரியை குறைக்க வேண்டும். கல்வி, மருத்துவம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைப்பது அவசியம். இதற்கு உயர்கல்விக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் மீதான வரியை குறைக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

பூபதி (வர்த்தகர் சங்க தலைவர், கோபால்பட்டி):- ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடங்கியதில் இருந்து விற்பனையில் பல்வேறு குழப்பம் உள்ளது. வர்த்தகர்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனை வரியை செலுத்த சிரமப்படுகின்றனர். 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விதமான வரிவிதிப்பு இருக்கிறது. ஜி.எஸ்.டி.யை மக்களுக்கு புரிய வைப்பது பெரும் சிக்கலாக இருக்கிறது. எனவே உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள், மின்னணு சாதனங்கள் என தனித்தனி வகையாக பிரித்து வரி விதித்தால் எளிதாக இருக்கும்.

ஒரே மாதிரி விதிக்கலாம்

ரவி சுப்பிரமணி (தொழில் வர்த்தக சங்க திண்டுக்கல் நகர தலைவர்):- ஜி.எஸ்.டி. வரி 4 வகைகளாக விதிக்கப்படுவது பெரும் குழப்பமாகவும், சிக்கலாகவும் உள்ளது. ஓட்டல்களுக்கு பல பொருட்கள் வெவ்வேறு விகிதத்தில் வாங்கப்படுகின்றன. ஆனால் உணவு சாப்பிடும் மக்களிடம் 5 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்க முடிகிறது. மேலும் ஜி.எஸ்.டி. வரி உச்சபட்சமாக 28 சதவீதமாக இருக்கிறது. இது மிகவும் அதிகம் அதை குறைக்க வேண்டும். அத்தியாவசிய உணவு பொருட்களின் மீதான வரியை குறைக்க வேண்டும். ஒரே மாதிரியான பொருட்களுக்கு வெவ்வேறு வரி விதிப்பை தவிர்த்து ஒரே வரியை விதிக்க வேண்டும்.

சுந்தர் (தனியார் நிறுவன ஊழியர், திண்டுக்கல்):- ஜி.எஸ்.டி. வரியை ஒரே மாதிரி விதித்தால் நல்லது தான். பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வரி விதிப்பால் விலைவாசி உயர்ந்து ஏழை, நடுத்தர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் வரி விதிப்பு இருக்க வேண்டும். உணவு பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்