மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கருத்து: எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல நடிக்கிறார்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல நடிக்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-01-24 22:21 GMT

எடப்பாடி:

பேட்டி

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் முழுவதும் 35 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. அவற்றில் தற்போது 26 மையங்கள் கட்டிட பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. புதிய கட்டிடங்களை அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தாதம்பட்டி பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

தூங்குவது போல நடிக்கிறார்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து குற்றச்சாட்டு கூறி வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்ட பயன்பாடுகளை முழுமையாக தெரிந்து கொண்டே, தெரியாதது போல் பாசாங்கு செய்கிறார். தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அப்படித்தான் எதிர்க்கட்சி தலைவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் தொடக்கம் முதல் தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டங்களிலும் பயனாளிகளை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.681 கோடியே 47 லட்சம் செலவு செய்துள்ளது என்று ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. மேலும் எம்.ஆர்.பி. தேர்வு விரைவில் தமிழகத்தில் நடைபெற்று மருத்துவ துறை சார்ந்த பணிகளுக்கு டாக்டர்கள் மற்றும் இதர அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் செய்திகள்