ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்யவேண்டும் என த.மா.கா.வினருக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-08-08 08:33 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது,

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தையும், சொத்தையும், இழந்து 28 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

தற்போது தமிழக அரசு சார்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அல்லது ஓழுங்குப்படுத்த மக்களிடம் கருத்து கேட்பதற்காக homeses@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தவேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 28 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இதனால் பல குடும்பங்கள் தலைவனை, மகனை, சகோதரனை இழந்து, பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

அதனால் த.மா.கா. சார்பாக நமது இயக்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவேண்டும் என்று தங்கள் கருத்துகளை அந்த மின்னஞ்சல் முகவரியில் வருகிற 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். அதோடு தாங்கள் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்