கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தட பணி தொடக்கம்; 7 மாதத்தில் முடிக்க தெற்கு ரெயில்வே திட்டம்

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது ரெயில்வே வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 7 மாதத்தில் பணிகளை முடிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

Update: 2023-08-28 08:27 GMT

பணிகள் தொடக்கம்

சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையம் இடையே 4-வது பாதை அமைக்க கடந்த 1992-ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. நிலப்பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் தாமதமாகி வந்தது. தற்போது, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இத்திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டு கொண்டுவர தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இந்த நிலையில், ரெயில்வே அமைச்சகத்திடம் உரிய ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கிலோ மீட்டர் தொலைவிலான 4-வது பாதைக்கான ஆரம்பகட்ட பணிகள் நேற்று தொடங்கியது. இந்த ரெயில்பாதை விரிவாக்க திட்டத்திற்காக சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை வரையிலும் மின்சார ரெயில் சேவை அடுத்த 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்துக்கு ரூ.279 கோடி செலவிடப்பட உள்ளது.

7 மாதம்

அதன்படி, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே பாதை மற்றும் நடைமேடை அமைக்கும் பணிக்காக பார்க் டவுன் மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் புற்கல், பழைய தண்டவாளங்கள் என தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 76 ஊழியர்கள், 4 ஜே.சி.பி. எந்திரங்கள், ஒரு ஹிட்டாச்சி கிரேன் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இப்பணியை 7 மாதத்தில் முடிக்க தெற்கு ரெயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. 4-வது பாதை அமைப்பதன் மூலம் தென்பகுதிக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்