வற்றி வரும் நீர்நிலைகள்

வால்பாறையில் கடும் வெயில் வாட்டி வருவதால், நீர்நிலைகள் வற்ற தொடங்கின. மேலும் தண்ணீருக்காக காட்டுயானைகள் அலைந்து திரிகின்றன.

Update: 2023-01-08 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் கடும் வெயில் வாட்டி வருவதால், நீர்நிலைகள் வற்ற தொடங்கின. மேலும் தண்ணீருக்காக காட்டுயானைகள் அலைந்து திரிகின்றன.

குளிர் பனிக்காலம்

வால்பாறை பகுதியில் குளிர் பனிக்காலம் தொடங்கி விட்டது. இதனால் பகலில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதன் காரணமாக கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, நடுமலை ஆறு, கருமலை ஆறு ஆகியவை தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது.

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் நிலவும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் காட்டு யானைகள் கூட்டம், நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகிறது. அவை தண்ணீருக்காக அலைந்து திரிவதை காண முடிகிறது. நேற்று முன்தினம் பட்டப்பகலில் சோலையாறு பிர்லா ஆற்றில் குட்டிகளுடன் காட்டு யானைகள் இறங்கி தண்ணீர் குடித்து சென்றது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் இருக்கும் ஆறுகளில் இறங்கி குளிக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சிவப்பு சிலந்தி தாக்குதல்

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆற்றங்கரை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை அறிந்த பின்னரே தண்ணீரில் இறங்கி குளிக்க வேண்டும். மேலும் குட்டிகளுடன் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வரும் யானைகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்ய கூடாது என்றனர்.

இதற்கிடையில் வால்பாறை பகுதியில் தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக ஆண்டுதோறும் தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஆரம்பித்து விட்டது. இதனால் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்