கண்காணிக்க வருகிறது...நுண்ணறிவு கேமராக்கள்...!

கோவை மாநகரில் முக்கிய இடங்களில் ரூ.50 லட்சத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2023-05-22 00:30 IST

கோவை

கோவை மாநகரில் முக்கிய இடங்களில் ரூ.50 லட்சத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை டவுன்ஹால் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளதாக கருதப்படும் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கோவை மாநகர போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு

இந்த நிலையில் கோவை மாநகரில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க ரூ.50 லட்சத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) கொண்ட கேமராக்களை வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் நபர்கள், தேடப்படும் நபர்களின் முகத்தை அடையாளம் காணும் வகையில், அவர்களின் புகைப்படங்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மூலம் செயற்கை நுண்ணறிவு கேமராக்களுடன் இணைக்கப்படும்.

எனவே மேற்கண்ட நபர்கள் வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களுக்கு வந்தால் இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அவர்களை தன்னிச்சையாக புகைப்படம் எடுத்து, அது குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்கும்.இதன் மூலம் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்