மனு கொடுக்க பெட்ரோல்-மண்எண்ணெய் கேனுடன் வந்த 2 பேரால் பரபரப்பு
மனு கொடுக்க பெட்ரோல்-மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 2 பேரால் பரபரப்பு;
பெட்ரோல் பாட்டிலுடன் வந்த மூதாட்டி
திருத்துறைப்பூண்டி ஆதனூர் பகுதியை சேர்ந்த லீலாவதி (வயது 70) என்பவர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது மூதாட்டி ஒரு பையை மறைத்து வைத்து கொண்டுவந்துள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அந்த மூதாட்டியின் பையை சோதனை செய்தனர். அதில் பாட்டிலில் பெட்ரோல் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அதனை கைப்பற்றி, மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறுகையில்,
எனது 2-வது மருமகளுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய வந்தேன். என்னை வீட்டை விட்டு விரட்டிய மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மண்எண்ணெய் பாட்டில்
திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் தனது பையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை கைப்பற்றி அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறுகையில்,
நான் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி அருகே எனது குடும்பத்தினருடன் 30 ஆண்டுகளாக வசித்து வந்தேன். கடந்த ஆண்டு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்த போது என்னுடைய வீட்டை அதிகாரிகள் இடித்து விட்டனர். இதற்கு பதிலாக வேறு இடம் இதுவரை தரப்படவில்லை. இது குறித்து பலமுறை கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து நடவடிக்கை இல்லை. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்வதற்காக வந்தேன் என்றார்.
பட்டா வழங்க வேண்டும்
திருவாரூர் அருகே சுந்தரவிளாகம் கிராமம் நேதாஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுந்தரவிளாகம் கிராமம் நேதாஜி நகரில் 25 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் எங்களிடம் மின்சாரம், வீட்டு வரி, அரசு வழங்கிய குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய அட்டைகளும் உள்ளன. இந்த நிலையில் நாங்கள் வசித்து வரும் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர் நல சங்கத்தினர், கழிவுநீர் அகற்றும் வாகனம் உரிமையாளர் சங்கத்தினருக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.