காவிரி ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்ட பணி:பாறைகள் வெடி வைத்து அகற்றப்படுவதால் கரையோர வீடுகளில் அதிர்வு
காவிரி ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்காக பாறைகள் வெடிவைத்து அகற்றப்படுவதால், கரையோர வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அம்மாபேட்டை
காவிரி ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்காக பாறைகள் வெடிவைத்து அகற்றப்படுவதால், கரையோர வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கதவணை மின்நிலையம்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மின் உற்பத்திக்காக எப்போதும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கும். இந்த கதவணை பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆனந்தம்பாளையம், சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, கோம்பூர் வரை காவிரி ஆற்றில் தண்ணீர் இன்றி பாறைகளாக காட்சி அளிக்கிறது.
ஆங்காங்கே தண்ணீர் குறைந்த அளவில் ஓடுவதால் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர்.
குடிநீர் திட்டம்
அம்மாபேட்டை காவிரி ஆற்றின் மறுகரையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காட்டூர் உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததை பயன்படுத்தி காட்டூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ராசிபுரம்-மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம், மல்லசமுத்திரம், நாமக்கல் ஆகிய பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீரேற்று நிலையமும், கரட்டுப்புதூரில் சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்கள் அச்சம்
குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோனேரிப்பட்டி கதவணையில் தண்ணீர் தேக்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க இரவு, பகலாக வேலை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காவிரி ஆற்றில் உள்ள பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கப்படுகிறது. இதனால் அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளித்து வரும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
முன் அறிவிப்பு
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றின் நடுப்பகுதி வரை சென்று குளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தநிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பாறைகளை வெடி வைத்து தகர்க்கிறார்கள். குளித்துக்கொண்டிருப்பவர்கள் மீது பாறைகள் விழுந்துவிடுமோ? என்று பயமாக இருக்கிறது.
மேலும் திடீரென காலை நேரங்களில் அதிக சத்தத்துடன் வெடி வெடிப்பதால் அம்மாபேட்டை பகுதியில் காவிரி கரையை ஒட்டியுள்ள வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. எனவே வெடி வைப்பதற்கு முன்பு பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும். அதேபோல் கரையோர வீடுகளுக்கு சேதம் ஏற்படாதவாறு குறைந்த சக்தி திறன் கொண்ட வெடிபொருட்களை பயன்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.