மண் கடத்தலை தடுத்து நிறுத்திய கல்லூரி மாணவர்கள்
வாணாபுரம் அருகே மண் கடத்தலை மாணவர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் வாகனங்களை சிறைபிடித்தனர்.;
வாணாபுரம் அருகே மண் கடத்தலை மாணவர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் வாகனங்களை சிறைபிடித்தனர்.
மண் கடத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பேராயம்பட்டு செல்லும் சாலையில் மலை குன்றுகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. இந்த மலை பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று மண் அள்ள வேண்டாம் என்று பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மீண்டும் மண் அள்ள வந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை முற்றுகையிட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மண் எடுக்காமல் அங்கிருந்து வாகனங்கள் திரும்பி சென்றனர்.
மண் அள்ளுவதற்காக...
இந்த நிலையில் மண் அள்ளுவதற்காக பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகள் வருவதாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் மண் எடுப்பதற்கு எந்த வாகனங்களும் வரவில்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனா்.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாக வாகனங்கள் மூலம் மண் கடத்தலில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் நேரடியாக புகார் தெரிவித்தால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வோம் என்றும், உங்களுடைய எதிர்காலம் வீணாகி விடும் என்றும் மிரட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.