கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் பணம்-செல்போன் பறிப்பு

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் பணம்-செல்போன் பறித்துச்சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-06 22:30 GMT

கோவை,

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் பணம்-செல்போன் பறித்துச்சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவையில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர்கள்

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சிவன் என்ற கிருஷ்ணன் (வயது 21). அவர் அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான நாசிம் (21), ஹக்கீம் (21), சாகுல் (21) மற்றும் தர்மபுரியை சேர்ந்த அருண் (21) ஆகிய 5 பேரும் கோவை புலியகுளம் பெரியார் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்து கோவையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இவர்கள் 5 பேரும் தங்கள் வீட்டில் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். வீட்டின் கதவை பூட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாலை 2.30 மணியளவில் அவர்கள் வீட்டுக்குள் 3 பேர் நுழைந்தனர்.

பணம்-செல்போன் பறிப்பு

அப்போது சத்தம் கேட்டு மாணவர்கள் 5 பேரும் திடுக்கிட்டு எழுந்தனர். அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருட்டுக்குள் 3 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 5 பேரும் எழுந்திருக்க முயற்சி செய்தபோது, திடீரென்று அந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 5 பேரையும் மிரட்டியதாக தெரிகிறது.

தொடர்ந்து அங்கிருந்த 5 செல்போன்களையும் எடுத்துக்கொண்டதுடன், அந்த மாணவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மற்றும் 3 பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இது குறித்து மாணவர்கள் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, மாணவர்கள் தங்கி இருந்த வீட்டுக்குள் புகுந்து செல்போன், பணம், நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகள் தொடர்பாக அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறோம் என்றனர்.

கோவையில் வீடு புகுந்து கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் நகை, செல்போன், பணம் பறித்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்