விடுதியில் தரமற்ற உணவு; அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

ஆண்டிப்பட்டி அருகே விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதாக கூறி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-23 17:51 GMT

ஆண்டிப்பட்டி அருகே விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதாக கூறி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு ரெயில் ரோடு பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்தநிலையில் இன்று காலை விடுதியில் பணியாற்றிய விடுதி காப்பாளர், சமையலர் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுவிட்டனர்.

இதனால் விடுதி பணியாளர் ஒருவர் சமையல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள், தரமற்று இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் விடுதிக்கு வெளியே திரண்டு வந்தனர். பின்னர் அங்குள்ள க.விலக்கு-கண்டமனூர் சாலையில அமர்ந்து, தரமற்ற உணவு வழங்கியதாக கூறி திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விடுதி காப்பாளரை வரவழைத்து, அவரிடம் போலீசார் விசாரித்தனர். மேலும் மாணவர்களின் புகார் குறித்து விளக்கம் கேட்டனர். அப்போது இனிவரும் நாட்களில் இதுபோன்ற புகார்கள் இல்லாதபடி உணவு தரமான முறையில் வழங்குவதாக விடுதி காப்பாளர் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்களின் இந்த மறியல் போராட்டத்தால் க.விலக்கு-கண்டமனூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்