பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; மின்சார ரெயில் மீது கல்வீச்சு

பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மின்சார ரெயில் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-10 03:19 GMT

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நேற்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் சென்னையில் உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர்.

பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் வந்ததும், மின்சார ரெயிலில் இருந்து கீழே இறங்கிய ஒரு கல்லூரியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து மற்றொரு கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரெயில் பெட்டியின் மீது சரமாரியாக வீசினர்.

பதிலுக்கு அவர்களும் கீழே இறங்கி, கற்களை வீசி எறிந்தனர். 2 கல்லூரி மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இடமே போர்க்களம்போல் காட்சி அளித்தது.

அதற்குள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. ஆனாலும் கல்லூரி மாணவர்கள், மின்சார ரெயில் பெட்டி மீது கற்களை வீசி எறிந்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். கல் வீச்சில் இருந்து தப்பிக்க உடனடியாக ரெயில் பெட்டியில் உள்ள கதவுகளை மூட முயற்சி செய்தனர்.

ஆனால் பல கதவுகளை மூட முடியாததால் ரெயில் பெட்டிக்குள் குனிந்தும், ஒளிந்தும் கல்வீச்சில் இருந்து தப்பினர். இந்த கல்வீச்சில் சில கல்லூரி மாணவர்கள் சிறிய அளவில் காயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கல்வீச்சில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் யார்? யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூட் தல பிரச்சினையால் 2 கல்லூரி மாணவர்களும் இந்த மோதலில் ஈடுபட்டார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக கல்வீசி தாக்கினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் மோதலால் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளும், மின்சார ரெயிலில் பயணம் செய்தவர்களும் பீதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்