மேடவாக்கத்தில் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து - ஒருதலை காதலால் மாணவர் வெறிச்செயல்
மேடவாக்கத்தில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகரைச் சேர்ந்த 16 வயது மாணவி, வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மாணவியிடம் பேச வேண்டும் என கூறி வலுக்கட்டாயமாக அங்கிருந்து மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத தெருவுக்கு இழுத்துச்சென்றார்.
பின்னர் மாணவியிடம், தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் அதற்கு மாணவி மறுத்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கல்லூரி மாணவியின் முகம், கை, தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி வலியால் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போலீசார், கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த வசந்த் என்ற கல்லூரி மாணவர் 'இன்ஸ்டாகிராம்' மூலம் மாணவிக்கு அறிமுகமாகி உள்ளார். அந்த மாணவர், மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது காதலை மாணவியிடம் கூறினார். ஆனால் அதற்கு மாணவி மறுத்துவிட்டார். ஆனாலும் அவர், கடந்த சில மாதங்களாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததுடன், மாணவியை பின்தொடர்ந்து வந்து தன்னை காதலிக்கும்படி கூறி தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்து வந்து ஒருதலை காதலை ஏற்குமாறு வற்புறுத்தியதும், அதற்கு மாணவி மறுத்ததால் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. தலைமறைவான கல்லூரி மாணவர் வசந்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.