கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
நெல்லையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடுதல் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தர்மபுரியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு வந்தார்.
அவர், நெல்லை சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து நெல்லை சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கூலி தொழிலாளியான மாரியப்பன் (48) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிபிரியா, குற்றம் சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். தொடர்ந்து மாரியப்பன் சிறையில் அடைக்கப்பட்டார்.