காதலனால் கர்ப்பமான கல்லூரி மாணவி சாவு: திருச்சியில் பரிதாபம்

காதலனால் கர்ப்பமான திண்டுக்கல் கல்லூரி மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2024-03-01 01:22 GMT

திருச்சி,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி காந்திகிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியில், விடுதியில் தங்கி நோயாளிகளை பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வந்தார். மாணவியின் பெற்றோர் இறந்துவிட்டதால், அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் உள்ள மாணவியை திருச்சியில் வசிக்கும் அவருடைய அத்தை மீனாட்சி பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது உடலில் மாற்றங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், மாணவியை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மாணவியிடம் விசாரித்தபோது, சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் கணக்காளராக வேலை செய்யும் ராம்குமார் என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்லூரி விடுமுறையின்போது அம்பாத்துறையில் உள்ள அவருடைய அண்ணன் வீட்டுக்கு அழைத்து சென்று, தன்னுடன் ராம்குமார் தனிமையில் இருந்ததாகவும், அதனால்தான் கர்ப்பம் ஆனதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த மீனாட்சி, அவரை திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் டாக்டர் கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால் அவருக்கு உதிரப்போக்கு நிற்கவில்லை. இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி சிறுமி என்பதால் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பற்றி குழந்தைகள் நல அலுவலகத்துக்கும், போலீசாருக்கும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் அக்காள் கொடுத்த புகாரின்பேரில் காதலன் ராம்குமார், மாணவியின் அத்தை மீனாட்சி மற்றும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகிய 3 பேர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்