லாரியின் பின்னால் கார் மோதி கல்லூரி மாணவர் பலி

மங்களமேடு அருகே லாரியின் பின்னால் கார் மோதி கல்லூரி மாணவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2023-03-22 23:48 IST

விபத்து

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள தம்பை கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டு இருந்த கார், எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டு இருந்த டிப்பர் லாரியின் பின்னால் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி காரில் பயணம் செய்த மதுரை மாவட்டம் ஆளவந்தான் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஷாம்கண்ணன்(வயது 22) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை கே.கே.நகரை சேர்ந்த சஷ்வந்த்(25), நம்மாழ்வார் இல்லம் விநாயகர் நகரை சேர்ந்த ஆகாஷ்(24), அஜய்(22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலி

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஷாம்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியான ஷாம்கண்ணனும், அஜய்யும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர் என்பதும், மற்ற 2 பேர் வேலை பார்த்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் விடுமுறைக்கு தங்களின் சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் சென்னையை நோக்கி சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மங்களமேடு போலீசார் லாரி டிரைவரான கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஐவத்துக்குடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டனை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்