ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

உடையார்பாளையம் அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-19 18:02 GMT

உடையார்பாளையம்,

கல்லூரி மாணவி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55), எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஸ்வேதா (வயது 19), நிவேதா (17) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் ஸ்வேதா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் நிவேதா விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கோவில் திருவிழாவையொட்டி தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழி மதுபாலாவை (19) அழைத்து கொண்டு ஸ்வேதா தனது வீட்டிற்கு வந்தார்.

ஏரியில் மூழ்கி பலி

இந்தநிலையில் மருதாணி இலை பறிப்பதற்காக உடையார்பாளையம் பெரிய ஏரி அருகே ஸ்வேதா, அவரது தங்கை நிவேதா மற்றும் தோழி மதுபாலா ஆகியோர் சென்றனர். பின்னர் அவர்கள் பெரிய ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் வழுக்கி ஏரியில் விழுந்துள்ளனர். இதில் மதுபாலாவும், நிவேதாவும் ஏரியின் கரைக்கு திரும்பினர்.

ஆனால் ஸ்வேதாவுக்கு நீச்சல் தெரியாததால் தனது தங்கை கண்முன்னே தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கையும், தோழியும் சத்தம் போட்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஏரியில் குதித்து ஸ்வேதாவை மீட்டு உடையார்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்வேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்