மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் சாவு

ராஜாக்கமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். திருமண வீட்டில் கட்டியிருந்த மின்வயரை அவிழ்க்கும் போது இந்த பரிதாபம் நடந்தது.;

Update:2023-03-26 00:15 IST

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். திருமண வீட்டில் கட்டியிருந்த மின்வயரை அவிழ்க்கும் போது இந்த பரிதாபம் நடந்தது.

கல்லூரி மாணவர்

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரிகோபால். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 20). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் அவ்வப்போது திருமணம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சீரியல் செட் மற்றும் சவுண்ட் பாக்ஸ் அமைக்கும் சவுண்ட்ஸ் சர்வீசில் ேவலை செய்து வந்தார்.

மின்சாரம் பாய்ந்து சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிள்ளையார் விளையில் நடைபெற்ற திருமண விழாவில் கட்டபட்டிருந்த சீரியல்செட்டை அவிழ்க்கும் பணியில் சதீஷ்குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த வயர்களை அவிழ்க்கும் போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில், அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரில் உள்ள கூரான கம்பிகளின் மீது விழுந்தார். இதில் கம்பிகள் குத்தியதால் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்