புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஏரியூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;

Update:2022-07-07 22:51 IST

ஏரியூர்

புதிய அரசு கல்லூரி

2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்க விழா சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதன்படி தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் தற்காலிக புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு மாவட்ட கலெக்டர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தொடக்க விழாவையொட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பாடப்பிரிவுகள்

புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் இந்தாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் சுமார் 260 மாணவ, மாணவிகள் இளங்கலை பட்டம் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்ககள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், ஒன்றியக்குழு தலைவர்கள் பழனிசாமி, கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வராஜ், மாது, புதிய கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

மேலும் இந்த விழாவில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் ரூ.4.52 கோடி மதிப்பீட்டில் 24 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் 30 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், பூமாண்டஅள்ளியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மையத்திற்கு ரூ.11.17 கோடி மதிப்பீட்டில் 21 வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.24.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. 94 வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்களுடன் கூடிய புதிய கட்டிடங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்