மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்.
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். ஆழ்வார்குறிச்சி வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'கடந்த 11-ந் தேதி வாகைகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியையும், அது அமைக்கப்பட்டிருந்த சிமெண்டால் ஆன திடலையும் சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்று கூறப்பட்டு இருந்தது.
பூர்வீக தமிழர் விடுதலை கட்சி சார்பில் அதன் தலைவர் இசைவாணன் மற்றும் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கருவீரபாண்டியன், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், மத்திய அரசின் பணிகளுக்கு பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 100 நாள் பயிற்சி செங்கோட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை மாற்றி தென்காசியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான காதொலி கருவி மற்றும் ஒருவருக்கு பாதுகாவலர் நியமன சான்று ஆகியவற்றை வழங்கினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.