பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை
பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினருடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையம் அமைப்பதால் விளைநிலங்கள், ஏரி, குளம், கால்வாய், மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்று கூறி ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 456-வது நாளாக பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி காஞ்சீபுரத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காண்பித்து தங்களது எதிர்ப்பு தெரிவிக்க போவதாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் கருப்பு கொடி போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் களஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது
அதன்படி உயர்மட்ட குழுவினர் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் களஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க தயாராகி உள்ளனர். இந்த நிலையில் களஆய்வு செய்து வரும் உயர்மட்ட குழுவினரை சந்தித்து தங்களின் நிலை குறித்து தெரிவிக்க போராட்ட குழுவினருக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்றும், ஏகனாபுரம் கிராமத்தில் இடிக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை உடனடியாக கட்டி தர வேண்டும் என்று போராட்ட குழுவினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் போராட்ட குழுவினரின் கோரிக்கை மீது எந்த விதமான நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
கடந்த 2 மாதத்திற்கும் மேலாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்த போவதாக போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர்.
போராட்டக் குழுவினரின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விமான நிலைய போராட்ட குழுவினரின் அறிவிப்பை அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு செயலாளர் சுப்ரமணியன் தலைமையில் வந்த 20-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினரை தனது அறைக்கு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தையில், இன்று (வியாழக்கிழமை) சென்னையில் மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். தலைமையிலான உயர்மட்ட குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உறுதியளித்தார், மேலும் கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போராட்டக்குழுவினர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு தங்கள் கிராமத்திற்கு திரும்பி சென்றனர்.