வேலூர் ஆவின் நிறுவனத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
வேலூர் ஆவின் நிறுவனத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வளாகத்தை தூய்மையாக பராமரிக்கும்படி அறிவுறுத்தினார்.
கலெக்டர் திடீர் ஆய்வு
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைத்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள முகவர்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. அதைத்தவிர மோர், தயிர், நெய், ஐஸ்கிரீம், பிஸ்கெட் உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆவின் நிறுவனத்தில் நேற்று திடீரென ஆய்வு செய்தார். முதற்கட்டமாக பால் மற்றும் உற்பத்தி பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லும் வெளிப்புற நுழைவுவாயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் வைத்திருந்த ஆவின் பால் மற்றும் பொருட்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்றும், அதற்கான உரிய ஆவணங்கள் உள்ளதா என்று பார்வையிட்டார்.
தூய்மையாக பராமரிக்க...
தொடர்ந்து பால் பதப்படுத்தும் பகுதி மற்றும் பிற பொருட்கள் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள இடங்களை தூய்மையாக பராமரிக்கும்படியும், ஆவின் வளாகத்தில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும்படியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் பால் பாக்கெட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் பாதுகாத்து வைக்கப்படும் குளிரூட்டும் அறைகளை பார்வையிட்டு வெப்பநிலை சரியான அளவில் பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வேலூர் ஆவின் பொதுமேலாளர் சாம்பமூர்த்தி, பொறியியல் மேலாளர் மேசகுமார், வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.