கூட்டுறவு வங்கிகளில் மேலாளர் பதவி நிரப்பப்படவில்லை: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் மேலாளர் பதவி இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் ஸ்ரேயாசிங்எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் வேலை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு சங்கங்களின் மூலம் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை சம்பளத்துடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும்.
இதற்காக பிணை வைப்புத்தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலுத்தினால் வேலை கிடைக்கும் என்று வாட்ஸ்-அப் வழியாகவும், சமூக வலைத்தளம் வழியாகவும் தவறான செய்திகள் பரவி வருகிறது.
ஏமாற வேண்டாம்
கூட்டுறவுத்துறை மூலம் இந்த பணியிடங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் இந்த பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.
பிணை வைப்புத்தொகை என்ற பெயரில் தொகையை செலுத்தி ஏமாற வேண்டாம். மேலும் இது குறித்து தவறான செய்திகளை பரப்புவோர் மீது குற்றவியியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.