மழைநீர் வடிகாலை தூர்வாராத ஒப்பந்ததாரரை கண்டித்த கலெக்டர்

கடலூர் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகாலை தூர்வாராத ஒப்பந்ததாரரை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கண்டித்தார். உங்களிடம் பணிகளை ஒப்படைப்பதற்கு பதிலாக நானே அனைத்து பணிகளையும் செய்து விடுவேன் என்றும் கூறினார்.

Update: 2023-07-25 18:45 GMT

கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா மார்க்கெட்டை, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.03 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி அண்ணா மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வசதிக்காக, அருகிலேயே தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக மார்க்கெட்டை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட தீபன் நகர், ரட்சகர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஒப்பந்ததாரரை கண்டித்த கலெக்டர்

இதையடுத்து கடலூர் திருமலை நகர் பகுதியில் கலெக்டர் அருண்தம்புராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் இருந்ததை கண்ட கலெக்டர், மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம், அது குறித்து விளக்கம் கேட்டார். அப்போது அவர், போதிய பணியாளர்கள் இல்லாததால் தூர்வாரவில்லை, விரைவில் தூர்வாரி விடுவதாக கூறினார்.

அதற்கு கலெக்டர், இதுபோன்ற காரணங்களை கூற வேண்டாம், உங்களிடம் பணிகளை ஒப்படைப்பதற்கு பதிலாக நானே அனைத்து பணிகளையும் செய்து விடுவேன். உடனே மழைநீர் வடிகாலை தூர்வார வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்பந்ததாரரை கண்டித்தார். அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் மாலதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்