கோட்டாட்சியர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியானார். இந்த வெடி விபத்து குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர், எம்.எல்.ஏ. ஆறுதல்
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் கோசலை என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு குடோன் உள்ளது. இந்த குடோன் நேற்று மாலை திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மல்லிகா என்பவர் பலியானார். மேலும் 9 பேர் கடலூர், புதுச்சேரி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 5 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அங்கிருந்த டாக்டர்களிடம் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர்.
கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலையில் வெடி விபத்து நடந்துள்ளது. இந்த ஆலை உரிமம் பெற்று இயங்கி வருகிறது.
இங்கு நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் இறந்து விட்டார். மற்ற 9 பேர் காயமடைந்தனர். லேசான காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும், ஒருவர் 80 சதவீத காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர்களுக்கு 24 மணிநேரம் கண்காணித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளோம்.
இதுபற்றி முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இறந்த பெண் குடும்பத்துக்கும், தீக்காயமடைந்த வர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இந்த விபத்து குறித்து கடலூர் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். எதனால் இந்த விபத்து நடந்தது என்பது பற்றி விசாரித்து, அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி மருந்து, வெடி தயாரிக்கும் ஆலைகளை ஆய்வு செய்து உள்ளோம். விதிமுறைகளை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.