கம்மாபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
கம்மாபுரம்,
அங்கன்வாடி மைய கட்டிடங்கள்
கம்மாபுரம் ஒன்றியம் வடக்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் ஊ.அகரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், வி.குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மற்றும் வகுப்பறை கட்டிட பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும் என ஒன்றிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி பணிகள்) பவன்குமார் ஜி கிரியப்பனவர், தாசில்தார் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சங்கர், சண்முகம், மணிவேல், ஓவர்சியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.