தூத்துக்குடி ஸ்பிக் உர தொழிற்சாலையில் கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி ஸ்பிக் உர தொழிற்சாலையில் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2022-07-02 17:21 GMT

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பு ஆண்டுக்கான குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் அங்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்காக அறிவிக்கப்பட்ட தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா விதை, உரம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான உரங்கள் தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலைக்கு நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் சென்று, உரம் அனுப்பும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து மாதம்தோறும் 36 ஆயிரம் முதல் 38 ஆயிரம் டன் வரை உரம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 36 ஆயிரம் டன் யூரியா மற்றும் 5 ஆயிரம் டன் டி.ஏ.பி. ஆகிய உரங்களை இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்பட உள்ளது. டெல்டா மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அதிகப்படியான உரங்களை உடனடியாக வழங்க ஸ்பிக் நிறுவன அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை பயிர்களுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எஸ்.ஐ. முகைதீன், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பழனி வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) கார்த்திகா, ஸ்பிக் பொது மேலாளர் செந்தில் நாயகம், வணிக பிரிவு நிர்வாகிகள் பாஸ்கர், அடைக்கலம், மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்தகவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்