செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு
செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மத்திய சிறை வளாகத்தில் ரூ.200 கோடியில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயார் செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 45 ஏக்கரில் திட்ட பணி தொடங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இதில் அரோமா பூங்கா, பாறை பூங்கா, தோட்டக்கலை பூங்கா, மூலிகை பூங்கா, மலர் பூங்கா என பல்வேறு பூங்கா அமைக்கப்படுகிறது. சிறப்பு அம்சமாக வரலாற்று மியூசியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறை வளாகத்தில் உள்ள நிழல் தரும் மரங்களை அகற்றாமல் அப்படியே பணி நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நகரில் வேறு எங்கும் இல்லாத வகையில் உயிரியல் பூங்கா மற்றும் சிறை வளாக மரங்களில் பழம் தின்னும் வவ்வால்கள் அதிகமாக வசிக்கின்றன.
செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தில் கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறைத்துறை சரக டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், சூப்பிரண்டு ஊர்மிளா, மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.