திருப்பரங்குன்றம் அருகே கிளினிக்கில் கலெக்டர் ஆய்வு; சிக்கிய போலி டாக்டர்
கிளினிக்கிற்கு சென்று கலெக்டர் நடத்திய திடீர் ஆய்வில் போலி டாக்டர் சிக்கினார்.
திருப்பரங்குன்றம்
கிளினிக்கிற்கு சென்று கலெக்டர் நடத்திய திடீர் ஆய்வில் போலி டாக்டர் சிக்கினார்.
போலி டாக்டர் கைது
மதுரை திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று கலெக்டர் சங்கீதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதே பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையையும் ஆய்வு செய்தார். அப்போது ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் சங்கீதா, அங்குள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு டாக்டராக இருந்தவரிடம் படிப்பு, டாக்டருக்கான சான்றிதழ் குறித்து விசாரித்தார்.
அப்போது கிளினிக் நடத்திய அழகர்சாமி (வயது 55), போலி டாக்டர் என தெரியவந்தது. இதனையடுத்து கிளினிக்கிற்கு சீல் வைக்கவும், போலி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அழகர்சாமியை பெருங்குடி போலீசார் கைது செய்தனர்.
குப்பைகளை அகற்ற உத்தரவு
இந்த நிலையில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ஒரு கிணறு குப்பை கிடங்காக மாறி இருப்பதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் நேரடியாக சென்று அந்த கிணற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் உடனடியாக கிணற்றிலிருந்து குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, என்ஜினீயர்கள் நேரு, லியோராஜ், சுகன்யா, ஒன்றிய மேற்பார்வையாளர் பூமிநாதன், வளையங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பிள்ளை பெருமாள், ஊராட்சி செயலர் கிருஷ்ணன் உள்பட பலரும் சென்றிருந்தனர்.