குளம் தூர்வாரும் பணிகள்

நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் குளம் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update:2023-05-06 00:30 IST

நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் குளம் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நன்னிலம் ஒன்றியம், சலிப்பேரி ஊராட்சியில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெல் அடிக்கும் களத்தினையும், ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை பழுது நீக்கம் செய்யப்பட்டு இருப்பதையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து சலிப்பேரி ஊராட்சி தெற்கு தெரு தாண்டவன் குளம் தூர்வாருவது குறித்தும், பத்தினியாபுரம் ஆற்றங்கரைத்தெருவில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளையும், ஆனைக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையையும் கலெக்டர் பார்வையிட்டார்.

படித்துறை

பின்னர் ஆனைக்குப்பம் பள்ளிகூடத்தெருவில் ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து உறிஞ்சிக்குழியினையும், தட்டாத்திமூலை குளத்தில் படித்துறை கட்டப்பட உள்ள பகுதியினையும் பார்வையிட்டார்.

இதையடுத்து நாடாகுடி ஊராட்சியில் ரூ.2.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், அப்பகுதியில் பழுதடைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டிடத்தினையும், நாடாக்குடி அய்யனார் குளம், ஸ்ரீவாஞ்சியம் ஊராட்சி தோப்பு குளம் ஆகியவற்றை தூர்வாருவது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

சமையல் கூடம்

அபிஷேக கட்டளை பகுதியில் நெல் அடிக்கும் களம் அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். பில்லூர் கீழநத்தம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து இடத்தை ஆய்வு செய்தார். பில்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் கூடம் கட்டும் பணி, புதிய நியாயவிலை கடை கட்டும் பணி ஆகிய வளர்ச்சி பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்