'சிறகுகள் 100' என்ற திட்டத்தின் மூலம் 100 பழங்குடியின மாணவர்கள் மாமல்லபுரம் கல்வி சுற்றுலா பயணம் - கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

‘சிறகுகள் 100’ என்ற திட்டத்தின் மூலம் 100 பழங்குடியின மாணவர்களை மாமல்லபுரத்துக்கு கல்வி சுற்றுலா அனுப்பும் பயணத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-20 13:40 GMT

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் 100 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டு வகையிலும், சுய சிந்தனையையும் தொலைநோக்கு பார்வையையும் வளர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் 'சிறகுகள் 100' என்ற திட்டத்தின் மூலம் மாமல்லபுரம் அனுப்பும் கல்வி சுற்றுலா பயணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கி கல்வி சுற்றுலா பயண வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு அத்தகைய திட்டத்தின் மூலம் மாணவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களில் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது கல்வியே என்பதையும் போதை பொருள்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படும் தீமை விளைவுகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 'சிறகுகள் 100' திட்டம் என்ற பெயரில் 100 பழங்குடியினர் மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களை பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் நிறுவனங்கள் உயர் கல்வியை சேர்ந்த நிறுவனங்கள் ஐ.ஐ.டி. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு பல்வேறு அனுபவங்கள் மற்றும் புரிதல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி, மாணவ, மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்