தென்காசியில் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் தென்காசியில் மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டார்.;
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் தென்காசியில் மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டார்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்-அமைச்சர் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது தென்காசி சுவாமி சன்னதி தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் இதனை துவக்கி வைத்து பள்ளி மாணவ-மாணவிகளுடன் காலை உணவை சாப்பிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், "தென்காசி மாவட்டத்தில் 329 மையங்களில் சுமார் 15,000 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணி இன்று தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் மேல நீலிதநல்லூர் மற்றும் குருவிகுளம் ஆகிய இரண்டு வட்டாரங்களில் 65 பள்ளிகளில் சுமார் 2,040 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 15 ஆயிரத்து 168 மாணவ மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்" என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, கல்வி அலுவலர் அருளானந்தம், வட்டார கல்வி அலுவலர்கள் இளமுருகன், சண்முகசுந்தர பாண்டியன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
சங்கரன்கோவில்- குறிஞ்சான்குளம்
சங்கரன்கோவில் நகராட்சி பள்ளியில் நடந்த நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தொண்டரணி அப்பாஸ்அலி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிஞ்சான்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக்முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், ஊத்துமலை ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி-கடையம்
புளியங்குடி நகராட்சி தைக்கா நடுநிலைப்பள்ளியில் நகர்மன்றத்தலைவி விஜயா சௌந்திரபாண்டியன் தலைமையில், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைகுமார் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, சுகாதார ஆய்வாளர் கணேசன், மேலாளர் செந்தில் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடையம் யூனியன் வெங்காடம்பட்டி ஊராட்சி லட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கி காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அச்சன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் பேரூராட்சி தலைவர் சுசீகரன், சேர்வைகாரன்பட்டி ஊராட்சி கேளையாபிள்ளையூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன், கீழாம்பூர் பஞ்சாயத்து மஞ்சபுளி மற்றும் தாட்டான்பட்டி தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் மாரி சுப்பு ஆகியோரும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சுரண்டை
சுரண்டை சிவபுராதபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு ஆணையாளர் சுகந்தி தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் கைலாசசுந்தரம், இளநிலை உதவியாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் வினோத் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகராட்சி பணியாளர் சங்கீதா நன்றி கூறினார். முன்னதாக சுரண்டை நகராட்சியில் நடைபெற்ற விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்பி, சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
செங்கோட்டை
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு நகர தி.மு.க. செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கேடேசன் தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் எஸ்எம்.ரஹீம், நகர அவைத்தலைவா் காளி, பள்ளி தலைமைஆசிரியா் பீட்டர் ஜூடுதத்தோஸ், நகர துணைச்செயலாளா் ஜோதிமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.